17 July 2017

தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள்

தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறுகிறார் சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர்

கேள்வி : புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பலவிதமாக கதைகள் கூறப்படுகின்றன. இது குறித்து தங்களின் கருத்தென்ன?
பதில் : புதிய அரசியலமைப்பொன்றை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புக்கு திருத்தத்தையோ மேற்கொள்வது எனக் கூறியே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வாக்குறுதியை அளித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அவ்வாக்குறுதியை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. அதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

1972, 1978 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்படட எந்தவொரு அரசியலமைப்புத் திட்டத்திற்கும் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவில்லை. கோல்புறூக் அரசியலமைப்பில் இருந்த சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க இருந்த பிரிவும் 1972 அரசியலமைப்பில் மாற்றப்பட்டது. அங்கு தான் பிரச்சினை ஆரம்பமாகியது. தமிழ் அரசியல் கட்சிகள் அன்று ஹர்த்தாலில் ஈடுபட்டன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. வடக்கு – கிழக்கில் யுத்தம் ஏற்பட்டதற்கு காரணம் அரசியலமைப்பில் இருந்த குறைபாடும் இளைஞர்கள் நிர்வாகத்தில் பங்கெடுக்க சந்தர்ப்பம் கிடைக்காமையும் ஆகும்.

கேள்வி : சிறுபான்மையினரின் பிரச்சினையைத் தீர்க்க இந்நாட்டில் முன்னாள் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு பலவித இடைஞ்சல்கள் ஏற்பட்டன. இன்றைய பிரச்சினைக்குக் காரணம் அன்று அவர்கள் சரியான முடிவை எடுக்காதது தானே?

பதில் : அது சரியே, வடக்கில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்க 1956, 1957 ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பண்டாரநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்த பிக்குகளே எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அன்று பிக்குகள் ரொஸ்மிட்டை சுற்றிவளைத்து ஒப்பந்தத்தை கிழித்தார்கள். அன்று பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தை கொண்டு வந்து என்ன கூறினார் தெரியுமா? இதை நான் இன்று கிழிக்கின்றேன். ஆனால் எதிர்காலத்தில் யுத்தமொன்று கூட உருவாகலாம் என்று கூறினார்.

அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்று அன்றைய பிரதமரான பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்டார். அன்று ரொஸ்மிட்டை சுற்றிவளைத்தவர்களிடையே பொலநறுவை ஹிங்குரக்கொட சேனாநாயகாராம தலைவராக இருந்த ஸ்ரீ தீராநந்த தேரரும் ஒருவராவார். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தூண் போன்றவர். அவர் அண்மையில் என்னிடம் அன்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையிட்டு இன்று வெட்கப்படுவதாகக் கூறினார்.

டட்லி சேனநாயக்க பிரதமராக இருந்த போது 1965, 1966 காலப் பகுதியில் செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்று செய்தார். அப்போதும் இதே போன்ற பிரச்சினையே ஏற்பட்டது. சரித்திரம் பூராவும் பிக்குகள் அநாகரிகமான முறையில் இதில் தலையிட்டார்கள். ஜே. ஆர். ஜயவர்தன காலத்தில் அபிவிருத்தி சபை, கிராம சபை என்பவற்றைக் கொண்டு வந்தார். அதுவும் செயல்படவில்லை. அதனால் தான் முப்பது வருடகால யுத்தம் ஏற்பட்டது. நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் காயம் இன்னும் உள்ளது. அதனை சுகமாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்தினுடையது.

கேள்வி : நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரித்து வருகின்றது. அதற்கு மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்களே?

பதில் : அதனால்தான் நான் சரித்திரத்தை ஞாபகப்படுத்தினேன். இன்றும் பிக்குகள் அதே இடத்தில் தான் இருக்கின்றார்கள். அதுதான் தவறான நிலைமையாகும். எமது நாட்டின் பொறுப்பான மதத் தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து சமாதானமான முறையில் நோக்க வேண்டும். இவ் அரசியலமைப்பானது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்றால் புதிய அரசியலமைப்பும், அதிகாரப் பரவலாக்கலும் தேவையென கூறியுள்ளார்கள். அரசாங்கம் தீர்வொன்றை கொண்டுவர முயற்சி செய்யும் போது எதிர்க் கட்சியினர் இனம், மதம் என்பவற்றை முன்னிறுத்தி நாட்டைப் பிரிக்கப் போகின்றோம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

கேள்வி : புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கத் தொடங்கி ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ளது. ஆனால் திடீரென தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்குக் காரணம் என்ன?
பதில் : பொதுமக்களின் கருத்தை அறிய லால் விஜேநாயக்க ஆணைக்குழு கண்டிக்கு வந்தபோது மல்வத்தை, அஸ்கிரியவைச் சேர்ந்த எந்தவொரு தேரரும் அங்கு சமுகமளிக்கவில்லை. தற்போது அவசரமாக எதிர்ப்புத் தெரிவிக்க முற்படுவது எதிர்க் கட்சியினரின் தூண்டுதலாலாகும். கடந்த அரசாங்கத்திடமிருந்து இலாப பிரயோசனம் பெற்றவர்களே அவர்களுடன் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கு வாகன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை கடந்த அரசாங்கத்தினர் செய்து கொடுத்தார்கள்.

இவர்கள் ஏன் இவ்வளவு காலம் புதிய அரசியலமைப்பு வேண்டாம். என்று சொல்வதற்கு காத்திருந்தார்கள்? இந்த அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தினுள்ளே பெரும்பான்மையான கட்சிகளின் உதவி கிடைக்கும். இந்த அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டால் அதன் பெருமை தற்போதுள்ள ஆட்சியிலுள்ளவர்களுக்கே என்பதால் தான் இவர்கள் வெளியே இருந்து புரட்சியொன்றை முன்னெடுக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பில் புத்த மதத்தக்கு சரியான இடம் கிடைக்காதென கூறுகின்றார்கள். மத சார்பற்றதாக இருக்க வேண்டுமென குழுவிலுள்ள ஒருவர் இருவர் கூறியுள்ளார்கள். உலகில் சில நாடுகளின் அரசியலமைப்பில் மதம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை.

தற்போது புத்த மதத்தை பாதுகாப்பதாக கூறுவதற்கு புத்த மதத்திற்கு என்ன நடந்துள்ளது? கடந்த அரசாங்க காலத்திலும் புத்த மத வளர்ச்சிக்காக பல சட்டங்களைத் தயாரித்தார்கள். அதற்கு கட்டபூர்வ அங்கீகாரம் தரும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்களின் கருத்து என்னவென்றால் புதிய அரசியலமைப்பு அவசியம், அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்பதாகும்.

கேள்வி : நாட்டின் அரசியலமைப்புத் தொடர்பாக இவ்வாறான தலையீட்டை தேரர்கள் செய்வது சரியென எண்ணுகின்றீர்களா?

பதில் : இந்த சட்ட வரைவு அரசியலமைப்பாக வரும் வரை இருந்திருக்க வேண்டும். புத்த மதத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டியிருக்கலாம். இந்த குழப்பத்தை ஏற்படுத்தக் காரணம் அரசியல் தேவையாகும்.

பலாத்காரமாக நபர்களை காணாமற் போகச் செய்யப்படுவது தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காததற்கும் காரணம் மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பால்தான் என்ற கருத்தும் நிலவுகிறது. இச்சட்டத்தின் மூலம் இராணுவ வீரர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தவறான விளக்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். யுத்தத்துக்குப் பின்னரும் எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். தெற்கிலும் வடக்கிலும் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதை கண்டுபிடிக்க வேண்டாமா? இனவாத ரீதியில் செயல்படும் சில தேரர்கள்தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

கேள்வி : இனவாத மற்றும் மதவாத சக்திகள் தலைதூக்கி உள்ளமை இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றதல்லவா?

பதில் : சுதந்திர போராட்டத்தின் போது பல இன மக்களும் இணைந்திருந்தார்கள். சுதந்திரம் பெற்ற பின் அரசியல் கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மையினரின் கட்சிகளோடு ஆட்சியை அமைப்பார்கள். தமிழ்ப் பிரதேசத்தில் உள்ளவர்களின் தலைவர்களும் விமானத்தில் கொழும்புக்கு வருவார்கள். ஆட்சியை கலைத்தபின் வீட்டிற்கு செல்வார்கள். ஸ்ரீ எழுத்தோடு வந்த கலவரம், கறுப்பு ஜுலை கலவரம் என்பன எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தின. மீண்டும் அவ்வாறான நிலைமை உருவாகக் கூடாது.

கேள்வி : இந்த பிரச்சினைகளில் காவி உடை அணிந்தவர்களின் அதிகாரம் முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. தற்போது அதனையே செய்வதாக சில தேரர்கள் கூறுகின்றார்கள் அல்லவா?

பதில் : அப்படியான வீர தீரம் மிக்க பிக்குகள் இருந்தார்கள். இன்று இனத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? புதிய அரசியலமைப்பால் இனத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? சிங்கள இனம், புத்த மதம், பௌத்த கலாசாரம் என்பன அழிந்து விடுமா? இல்லையே ஜே. ஆர். ஜயவர்தன, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் அரசியலமைப்பைக் கொண்டு வந்தார்கள். சிங்கள இனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதா? மஹிந்த 18 வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். அப்போது தேரர்கள் அமைதியாகத் தானே இருந்தார்கள்.
நன்றி- தினகரன்

No comments:

Post a Comment