18 September 2016

ஆட்சி பரவலாகத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்

நாட்டில் மேல் வர்க்கத்தினருக்காக மாத்திரமே உள்ள ஆட்சி முறைமை சாதாரண மக்களுக்கும் சென்றடையக்கூடிய ஓர் ஆட்சிமுறைமையை உருவாக்க அனைத்து கீழ் வர்க்க மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கா யாழ்ப்பாணம் சங்கானையில் இடம்பெற்ற “நாட்டின் எதிர்காலமும் இடதுசாரிகளின் கடமையும்”  என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றும்போது நாட்டிலுள்ள அனைவருக்கும் அரசியல் தேவையாகவுள்ளது. வெறுமனே விவசாயத்தையும், மீன்பிடியையும், தொழிற்சாலைகளையும் வைத்துக்கொண்டு வாழ்ந்துவிட்டு போகலாம் என நினைப்பது தவறு. ஏனெனில் வெறுமனே நமது தொழில்களை செய்து கொண்டு எமது சமூகத்திலுள்ள பொதுவான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. வீதிப்பிரச்சினை, கல்விப் பிரச்சினை, சுகாதாரப்பிரச்சினை என பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தேவை. இந்த நிலையில் அப் பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்பட்டதா? ஏன பார்த்தால் அது இடம்பெறவில்லை. அந்த வகையில் இன்று நாட்டிலுள்ள தலைவர்கள், முதல் தடவையான தலைவர்கள் அல்ல. அரசாங்கமும் அல்ல. கடந்த 68 ஆண்டுகளாக பல அரசியல் தலைவர்களையும், அரசாங்கங்களையும் உருவாக்கியிருந்தோம். 

இன்று ஐ.தே.க - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஓர் ஆட்சியமைத்துள்ளனர். ஆனால் அவர்களால் எமக்கு கிடைக்கப்பெற்றது என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
ஆரசாங்கத்தின் பிரதான கடமை மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்புக்கள் வாழ்வாதாரத்தை வழங்க வேண்டியதே. ஆனால் இவற்றை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கங்கள் தோல்வியை கண்டுள்ளன. ஆனால் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கங்கள் மக்கள் மீதான யுத்தத்தை நிர்மாணித்திருந்தனர். இதனால் இந்த மண் மக்களின் கண்ணீராலும் இரத்தத்தினாலும் தோய்ந்துள்ளது. அந்தளவுக்கு இந்த அரசாங்கங்கள் மக்களுக்கு அநீதிகளையே செய்திருக்கிறது.  

மேலும் இன்று நாடு பாரி பொருளதார நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதன் காரணம் இந்த அரசுகள் கடந்த 68 வருட காலமாக கடைப்பிடித்திருந்த பொருளாதாரக் கொள்கைகளே. இவற்றைவிட நாட்டிலுள்ள மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக சேமித்து வைக்கப்படும் தேசிய சொத்தானது மேல் வர்க்கம் என்ற ஓர் சிறிய குழுவினால் சூறையாடப்படுகின்றது. 

உதாரணமாக இந் நாட்டின் சுதாகார அமைச்சர் இந்நாட்டில் மருத்துவம் பெறுவதில்லை. அதற்காக அவர் வெளிநாட்டிற்கு செல்கின்றார். அதேபோன்று கல்வியமைச்சரது பிள்ளைகள் இந்நாட்டில் கல்வி கற்பதில்லை. அவர்கள் வெளிநாடுகளிலே கல்வி கற்கின்றார்கள். இவ்வாறு நாட்டின் தேசிய சொத்து ஓர் குறிப்பிட்ட குழுவினரால் சூறையாடப்படுகிறது. 

நாட்டிலுள்ள மேல்தட்டு வர்க்கம் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கிடையே இனவாதமும், பிரிவினைவாதமும் காணப்படுவதில்லை. ஆனால் இவர்கள் சாதாரண மக்களிடையே இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த யுத்த நிலைமைகளின்போது சிங்கள மக்களிலும், தமிழ் மக்களிலும் பாதிக்கப்பட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் சாதாரண மக்களும் அவர்களது பிள்ளைகளுமேயாவார்கள் தவிர மேல் தட்டு வர்க்கத்தினர் அல்ல. 

எனவே எங்களுக்கு ஓர் தேவையுள்ளது. எங்களுக்கான போராட்டம் ஒன்று உள்ளது அது மீண்டும் ஆயுதம் ஏந்திய போராட்டமல்ல. அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு எதிரான போராட்டம். இப்போராட்டத்தினூடாக வடக்கிலும் , தெற்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாகும். இப்போராட்டத்தினூடாக வடக்கிலும் தெற்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதனூடாக தமிழ் சிங்கள இனவாதத்திற்கெதிராக போராட வேண்டும். 

ஏனெனில் இனவாதம் என்ற ஒன்று உருவாகுமாயின் அதேபோன்றதொரு மற்றுமொரு இனவாதம் வளர்ச்சியடையும். வடக்கிலே தமிழ் இனவாதம் வளர்க்கப்படுமாயின் தெற்கிலே அதேபோன்றதொரு இனவாதம் உருவாகும். எனவே மக்களது ஒன்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். வடக்கு தெற்கிலே கீழ்தட்டு வர்க்க மக்கள் ஒன்று திரண்டு புதியதோர் அரசாங்கத்தை உருவாக்க அணிதிரள வேண்டும் இதற்கான ஒத்துழைப்பை நாம் வழங்க தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி 

No comments:

Post a Comment