14 August 2016

நல்லாட்சியை சீர்குலைக்கும் சாம்பல்தீவு புத்தர் சிலை

திருகோணமலையில் சமீப காலமாக இடம் பெற்றுவருகின்ற நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அதில் மிக முக்கியமாக சாம்பல் தீவு சந்தியில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விடயம் தொடர்பாகவும், திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க. காந்தரூபன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  கடிதத்தில், 
முன்னால் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.
அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சில சம்பவங்கள் நல்லட்சி சூழலை குழப்புவதற்கென விசமிகளால் திட்டமிட்டு இடம்பெறுவதை காணமுடிகிறது.
இதற்கு நல்ல உதாரணமாக இம்மாதம் திருகோணமலை சல்லி சாம்பல்தீவு சந்தியில் புத்தபகவான் சிலை ஒன்று வைக்கப்பட்டது. ஆயினும் இந்த இடத்தில் 5 கிலோமிற்றர் சுற்றளவில் எந்த ஒரு பௌத்த மத மக்களும் இல்லாத போதும் எதேச்சாதிகாரமாக அங்கு நடந்தேறிய பல விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தள்ளது.
இந்நிகழ்வில், நிலாவெளி பொலிஸ் நிலைய பிரிவிலுள்ள பொலிசாரும் அவர்களின் வாகனங்களும், சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அவ்விடத்தில் சல்லியைச் சேர்ந்த அமரர் முருகேசு நடராசா அவரின் ஞாபகார்த்தமாக அவருடைய மனைவி சிவக்கொழுந்து நடராசா அவர்களினால் நிர்மானிக்கப்பட்ட பயணிகள் இளைப்பாறும் கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையின் போது அங்கு இராணுவமும் கடற்படையினரும் சிறிய முகாம் ஒன்றை அமைத்து கடமையில் ஈடுபட்டு வந்தனர். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ முகாமைச் சுற்றி தகரம் கொண்டு மறைக்கப்பட்டிருந்தனால் பாதுகாப்பு காரணம் கருதி இங்கு என்ன நடக்கிறது என்பது எமக்குத் தெரியாது.
தற்போது நாட்டில் நிலவிவருகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் காரணமாக நாட்டில் தேவைக்கு அதிகமாகவுள்ள பாதுகாப்பு அரண்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அதற்கமைய இந்த சாம்பல்தீவு சந்தியில் இருந்த படைமுகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த அவர்களின் உடமைகளையும் எடுத்தச் சென்றுவிட்டனர்.
அந்த வேளையில் இங்கிருந்த புத்தபகவானின் சிறிய வழிபாட்டுத்தலமும் அதன் அருகில் இருந்த அரசம மரமும் இருந்துள்ளதை அவதானித்தோம். ஆயினும் இந்த அரச மரம் சில விசமிகளால் வெட்டப்ட்டுள்ளது. ஆயினும் இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இருப்பினும், அதற்காக படைமுகாம்கள் இருந்த எல்லா இடத்திலும் புத்தபகவானின் ஆலயங்களை அமைத்து அதனை போதிய பராமரிப்பு இன்றியும் ஏனைய சமய மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாவது நல்லாட்சி அரசிற்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும்.
நல்லாட்சியை விரும்பாத சில விசமிகளும், முறுகலை ஏற்படுத்த எத்தனிக்கும் சில பௌத்த மத துறவிகளின் செயல்களாலும் இந்நிலை ஏற்பட்டு வருகின்றது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்க உயரதிகாரிகளும் தமக்கு ஏன் வீண் பிரச்சினை என்று பாராமுகமாக இருக்கிறார்கள் 
இவ்விடயத்தில் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், உப்புவெளி பிரதேச சபை உள்ளுராட்சி திணைக்களம் என்பன பாராமுகமாக இருப்பது மேலும் கவலையை தோற்றுவிக்கிறது.

எனவே இவ்விடயத்தினை இவ்வாறு பல கோணங்களில் பாரத்தால், சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அந்த கட்டடத்திற்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பிற்கு உத்தரவிட்டது யார்?
எனவே இன நல்லுறவையும் புத்தபகவானை வணங்கி அவருடைய போதனைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஓருவன் என்ற அடிப்படையில் அவருடைய பெயரால் எந்த சர்ச்சையையும் மீண்டும் திருகோணமலை மண்ணில் ஏற்பட்ட விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், சாம்பல்தீவு சந்தியில் இருந்து இந்த சிலையை அகற்றி இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வண்ணம், அதிகாரிகளையும் ஏனைய சம்பந்த பட்டவர்களையும் அறிவுறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment