19 August 2016

நாகரிகம் மிகுந்த அரசியல் கலாசாரத்தின் தோற்றம்

பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து கூட்டரசாங்கமொன்றைத் தோற்றுவித்து ஒரு வருட காலம் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வேளையில் இரு முக்கிய விடயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. முன்னைய ஆட்சி நிலவிய பத்து வருட காலப் பகுதியையும், ஆட்சி மாற்றத்தின் பின்னரான சுமார் ஒரு வருடமும் எட்டு மாதங்களுமான நல்லாட்சி காலப் பகுதியையும் ஒரு தடவை பின்நோக்கிப் பார்ப்பது இப்போதைய வேளையில் மிகவும் அவசியம்.
தீயனவற்றையும் நல்லனவற்றையும் முடிவு செய்வதற்கு ஒப்பீடுகளே அவசியமாகின்றன. ராஜபக்ஷக்களின் பத்து வருட கால ஆட்சியையும், மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய ஆட்சியையும் ஆராய்ந்து நல்லதையும் தீயதையும் முடிவு செய்வதற்கும் ஒப்பீடுகள்தான் இங்கு அவசியம்.
இத்தகைய ஆய்வின் போது ராஜபக்ஷக்களின் பத்து வருட கால ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை சுருக்கமாகவேனும் இவ்விடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.
அன்றைய பத்து வருட காலப் பகுதியில் நடந்த அத்தனை மீறல்களையும் விரிவாக இங்கே குறிப்பிடுவது இயலாத காரியம்.
ஜனநாயகம் என்பது மிகப் பெறுமதி வாய்ந்தது. அக்கால மன்னராட்சியையும் இக்கால பாராளுமன்ற ஆட்சி முறையையும் வேறுபடுத்தும் சுவராக ஜனநாயகத்தைக் கொள்ளலாம். உலகெங்கும் அக்கால மன்னராட்சி முறைமை படிப்படியாக மறைந்து பரிணாமம் பெற்று, மானுடவாதம் வளர்ச்சியடைந்து உண்மையான ஜனநாயகம் தோற்றம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் சென்றதை வரலாற்றில் நாம் அறிந்திருக்கிறோம். மக்கள் தங்களை நேர்மையாக ஆட்சி செய்வதற்கான அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்கான சிறப்பான உரிமையை ஜனநாயகம் வழங்கியிருக்கிறது. அவ்வாறான ஜனநாயகத்தின் வாயிலாகவே உலகில் இன்னும் நீதியும் நேர்மையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற பின்னர் ஜனநாயகம் வேகமாக வளர்ச்சி பெற்ற நாடுகளில் இலங்கையையும் முக்கியமானதாகக் குறிப்பிடலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பிய தேசத்தவர்களால் எமது நாடு சுமார் நான்கரை நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சி மிகவும் அபாரமானது.
இங்கிலாந்தினால் எமது நாடு சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சுதந்திரத்தை நோக்கிய இறுதிக் காலப் பகுதியில் பிரிட்டிஷார் எமக்குக் கற்றுத் தந்த ஜனநாயக விழுமியங்கள் ஏராளம். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறையுடன், மனித உரிமைகளையும் அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு 1948ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து ஆரம்பமாகின்றது. பல்கட்சி அரசியலுக்கு நாம் பழக்கப்பட்டுப் போயிருக்கிறோம். இலங்கையின் அரசியல்
வரலாற்றில் அரசியல் போட்டாபோட்டிகள் தீவிரமாக இடம்பெற்றிருக்கின்றன. அவ்வப்போது ஓரிரு கிளர்ச்சிகளையும் எமது நாடு சந்தித்து வந்துள்ளது.
ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. எத்தனையோ அனுபவங்களை இந்நாடு சந்தித்துள்ள போதிலும், பதவியிலுள்ள அரசாங்கமொன்று ஜனநாயகத்தையும் சட்டதிட்டங்களையும் காலின் கீழ்போட்டு மிதித்தபடி தான்தோன்றித்தனமான முறையில் ஆட்சியை நடத்திய அனுபவத்தை முதன்முதலாக முன்னைய ஆட்சிக் காலத்திலேயே இந்நாடு சந்தித்திருக்கிறது.
ஜனநாயகமும் சட்டதிட்டங்களும் அலட்சியம் செய்யப்பட்டதனால் உள்நாட்டில் நெருக்கடிகளும் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான அவநம்பிக்கையும் ஏற்பட்டமை ஒருபுறமிருக்க, சர்வதேச அரங்கிலும் எமது நாடு வெறுப்பாகவே நோக்கப்பட்டது. மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மிக மோசமாக மீறுகின்ற நாடாக சர்வதேச அரங்கில் இலங்கை முதன் முதலாக முத்திரை குத்தப்பட்ட காலப் பகுதி அதுதான்.
முன்னைய ஆட்சி முறையின் விளைவாக எமது மக்கள் மறைமுகமாகவேனும் ஏராளமான பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. உலகப் பொதுமன்றமான ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது தொடர்ச்சியாக பிரயோகித்து வந்த நெருக்குதல்களுக்கெல்லாம் காரணம் முன்னைய ஆட்சியின் அராஜகங்களே என்பது மக்களுக்குப் புரியாததல்ல.
உலகப் பொதுமன்றங்களின் எச்சரிக்கைகளைக் கூட அன்றைய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தியதில்லை. உலகையே எதிர்த்து நிற்கக் கூடிய வல்லரசு நாடாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் இலங்கையை சித்தரித்துக் காண்பித்தபடி ஒரு தசாப்த காலம் நாட்டின் கீர்த்தியை அவர்கள் சீர்குலைத்திருக்கின்றனர்.
ஊழல், முறைகேடு, சட்ட மீறல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம், மனித உரிமை மீறல்கள், இனவாதம் என்றெல்லாம் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற அராஜகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முன்னைய ஆட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தின் பாதிப்பு குறித்து என்றுமே கவலை கொண்டதில்லை. அதிகாரத்திலிருக்கும் அரசாங்கமானது நாட்டு மக்களை எவ்விதத்திலும் ஆட்சி புரியலாமென்பதே அவர்களது சித்தாந்தமாக இருந்தது.
அன்றைய அத்தனை அராஜகங்களையும் குழு தோண்டிப் புதைக்கும் வகையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் சென்றிருக்கின்றன. கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, ஓகஸ்ட் மாதத்தில் எமது நாடு பொதுத் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் மக்கள் தமது ஆணையை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர். ராஜபக்ஷக்களின் ஆட்சி முறைமை நாட்டுக்கு ஒவ்வாதது என்பதே அந்த தெளிவான தீர்ப்பு ஆகும்.
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை எதிரும்புதிருமான இரண்டு தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதென்பது அபூர்வமான சரித்திர நிகழ்வு. இத்தகைய ஒன்றிணைவானது நாகரிகமான அரசியல் கலாசாரத்துக்கான பாதையையும் திறந்து விட்டிருக்கிறது. பொதுத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ‘அரசுக்காகவே மக்கள்’ என்ற நிலைமையிலிருந்து எமது நாடு விடுபட்டு ‘மக்களுக்காகவே அரசு’ என்ற யதார்த்தம் இப்போது வெளிப்பட்டு நிற்கிறது.
ஜனநாயகத்தின் உண்மையான பெறுமானத்தை இப்போதுதான் எமது மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மனித உரிமைகளுக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கின்ற நாகரிகமான கலாசாரமொன்று நாட்டில் நீண்ட காலத்தின் பின்னர் தோற்றம் பெற்றிருக்கிறது. அச்சுறுத்தல்கள் இன்று இல்லை. ஊழல் மோசடி, முறைகேடுகள், மனித உரிமை மீறல்கள், நீதித்துறை மீதான அலட்சியம் என்பதெல்லாம் இன்று மறைந்தோடி விட்டன.
முன்னைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கடன் சுமையின் விளைவுகளால் இன்றைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை மாத்திரம் சீர்தூக்கிப் பார்ப்பது முக்கியமல்ல. நாட்டில் உண்மையான ஜனநாயகம் தோற்றம் பெற்றதுதான் இங்கு பிரதானம்.
அராஜகத்தன்மை மேலோங்கிய நாடுகளில் ஒருபோதுமே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட்டதில்லை. நாட்டின் உண்மையான முன்னேற்றம் ஜனநாயகத்தை அத்திவாரமாகக் கொண்டே கட்டப்படுகிறது. இன்றைய அரசாங்கமானது ஜனநாயகப் புரட்சியின் வாயிலாகக் கட்டப்பட்டதெனக் கூறுவதே பொருத்தம்.
எஸ். பாண்டியன்
தினகரன்

15 August 2016

சுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்

சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிவைத்து  கூறுகையில், இன்று நாம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பல நாற்றாண்டுகளி்ல் நாம் சாதித்ததை நினைத்து பெருமை அடைய வேண்டும். இருப்பினும் இன்னும் அதிக பணிகள் நம்முன் உள்ளன. நமது சுதந்திரம் கடுமையான போராட்டத்திற்கு பின் கிடைத்தது. சுதந்திரம், இந்திய மக்களின் தியாகம், தைரியம், விடாமுயற்சி காரணமாக கிடைத்தது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் நம் முன் இல்லை. இருப்பினும், அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்பு நம்முன் உள்ளது. இது அவர்கள் எதற்காக போராடினார்களோ அவற்றின் மதிப்பு, கொள்கைகளை நம்மிடம் விளக்குகிறது.நமது நாட்டை  வழிநடத்தி செல்கிறது. 

இங்கிலாந்திடமிருந்து பெற்ற சுதந்திரத்தை மட்டும் நாம் கொண்டாடவில்லை. சமநிலையற்றதன்மை மற்றும் பாரபட்சம், நமது வாழ்க்கையை சுதந்திரமாக தேர்வு செய்யவும், அனைத்து வாய்ப்புகள் கிடைக்கும் சமுதாயத்தை உருவாக்கவும் நாம் மேற்கொண்டுள்ள உறுதிமொழியை கொண்டாட வேண்டும். சமீப காலமாக, அடக்குமுறை சக்திகள், நமது சுதந்திரத்திற்கு மிரட்டலாக உள்ளதை நாம் பார்த்து வருகிறோம். சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது.இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமாக வாழவும், கவுரவமாக இருக்கவும், தங்களது கருத்துக்களை வெளிப்படையாககூறவும் உரிமையுள்ளது.

இந்தியாவில் அனைவரும் பயமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது இந்தியர்களாகிய நமது கடமையாகும். பிரிவினை மற்றும் அடக்குமுறை அமைப்புகளுக்கு அடிபணியாமல், நமது கருத்துகளை வெளிப்படையாக உலாவ விட வேண்டும். இவர்களுக்கு நாம் எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன். இந்த உண்மைக்காக எப்போதும் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- தினமலர்

14 August 2016

நல்லாட்சியை சீர்குலைக்கும் சாம்பல்தீவு புத்தர் சிலை

திருகோணமலையில் சமீப காலமாக இடம் பெற்றுவருகின்ற நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அதில் மிக முக்கியமாக சாம்பல் தீவு சந்தியில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விடயம் தொடர்பாகவும், திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க. காந்தரூபன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  கடிதத்தில், 
முன்னால் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.
அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சில சம்பவங்கள் நல்லட்சி சூழலை குழப்புவதற்கென விசமிகளால் திட்டமிட்டு இடம்பெறுவதை காணமுடிகிறது.
இதற்கு நல்ல உதாரணமாக இம்மாதம் திருகோணமலை சல்லி சாம்பல்தீவு சந்தியில் புத்தபகவான் சிலை ஒன்று வைக்கப்பட்டது. ஆயினும் இந்த இடத்தில் 5 கிலோமிற்றர் சுற்றளவில் எந்த ஒரு பௌத்த மத மக்களும் இல்லாத போதும் எதேச்சாதிகாரமாக அங்கு நடந்தேறிய பல விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தள்ளது.
இந்நிகழ்வில், நிலாவெளி பொலிஸ் நிலைய பிரிவிலுள்ள பொலிசாரும் அவர்களின் வாகனங்களும், சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அவ்விடத்தில் சல்லியைச் சேர்ந்த அமரர் முருகேசு நடராசா அவரின் ஞாபகார்த்தமாக அவருடைய மனைவி சிவக்கொழுந்து நடராசா அவர்களினால் நிர்மானிக்கப்பட்ட பயணிகள் இளைப்பாறும் கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையின் போது அங்கு இராணுவமும் கடற்படையினரும் சிறிய முகாம் ஒன்றை அமைத்து கடமையில் ஈடுபட்டு வந்தனர். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ முகாமைச் சுற்றி தகரம் கொண்டு மறைக்கப்பட்டிருந்தனால் பாதுகாப்பு காரணம் கருதி இங்கு என்ன நடக்கிறது என்பது எமக்குத் தெரியாது.
தற்போது நாட்டில் நிலவிவருகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் காரணமாக நாட்டில் தேவைக்கு அதிகமாகவுள்ள பாதுகாப்பு அரண்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அதற்கமைய இந்த சாம்பல்தீவு சந்தியில் இருந்த படைமுகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த அவர்களின் உடமைகளையும் எடுத்தச் சென்றுவிட்டனர்.
அந்த வேளையில் இங்கிருந்த புத்தபகவானின் சிறிய வழிபாட்டுத்தலமும் அதன் அருகில் இருந்த அரசம மரமும் இருந்துள்ளதை அவதானித்தோம். ஆயினும் இந்த அரச மரம் சில விசமிகளால் வெட்டப்ட்டுள்ளது. ஆயினும் இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இருப்பினும், அதற்காக படைமுகாம்கள் இருந்த எல்லா இடத்திலும் புத்தபகவானின் ஆலயங்களை அமைத்து அதனை போதிய பராமரிப்பு இன்றியும் ஏனைய சமய மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாவது நல்லாட்சி அரசிற்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும்.
நல்லாட்சியை விரும்பாத சில விசமிகளும், முறுகலை ஏற்படுத்த எத்தனிக்கும் சில பௌத்த மத துறவிகளின் செயல்களாலும் இந்நிலை ஏற்பட்டு வருகின்றது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்க உயரதிகாரிகளும் தமக்கு ஏன் வீண் பிரச்சினை என்று பாராமுகமாக இருக்கிறார்கள் 
இவ்விடயத்தில் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், உப்புவெளி பிரதேச சபை உள்ளுராட்சி திணைக்களம் என்பன பாராமுகமாக இருப்பது மேலும் கவலையை தோற்றுவிக்கிறது.

எனவே இவ்விடயத்தினை இவ்வாறு பல கோணங்களில் பாரத்தால், சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அந்த கட்டடத்திற்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பிற்கு உத்தரவிட்டது யார்?
எனவே இன நல்லுறவையும் புத்தபகவானை வணங்கி அவருடைய போதனைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஓருவன் என்ற அடிப்படையில் அவருடைய பெயரால் எந்த சர்ச்சையையும் மீண்டும் திருகோணமலை மண்ணில் ஏற்பட்ட விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், சாம்பல்தீவு சந்தியில் இருந்து இந்த சிலையை அகற்றி இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வண்ணம், அதிகாரிகளையும் ஏனைய சம்பந்த பட்டவர்களையும் அறிவுறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 August 2016

அரசியலமைப்பு விவகாரம் - முதலமைச்சருக்கு பதிலாக எதிர்கட்சித்தலைவர் தவராசா


அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான எனது அனுபவம், ஆற்றல் காரணமாகவே, நான் ஈ.பி.டி.பி கட்சியைச் சார்ந்தவராக இருந்தும், முதலமைச்சர் தன் சார்பாக அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தன்னைப் பிரதிநிதித்துவப்ப டுத்தும்படி கோரியிருந்தார்.

அவ்வாறான அவரினது கோரிக்கைகளிற்கு நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேனேயன்றி, அவர் சார்பாக கழியாட்ட விழாக்களிலோ, அல்லது பொது நிகழ்வுகளிலோ நான் பங்குகொள்ளவில்லை. முதலமைச்சர் சார்பாக நான் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தொடர்பான பல ஊகங்களும், தரக்குறைவான விமர்சனங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மாற்றுக் கொள்கைகளிற்கான அமையத்தினால் நீர்கொழும்பு ஹெறிற்றன்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட “புதிய அதிகாரப் பகிர்வு ஊடான தீர்வு” New Devolution Settlement for Sri Lanka) கருத்தரங்கில் தன் சார்பாக ஏனையோருடன் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்துமாறு கோரியிருந்தார்.

இம் மகாநாட்டில் மாகாண முதலமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாகாண சபைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு வளவாளர்கள் பங்கேற்றிருந்தனர். நான் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் அவர் சார்பிலும் பங்கெடுத்திருந்தேன்.

இதற்கு முன்பும் ஜுலை 8 ம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் தலைமையிலான வழிநடத்தற் குழு (Steering Committee) முன்பாகவும் முதலமைச்சர் சார்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சருடன் சேர்ந்து பங்கேற்றிருந்தேன்.

சந்திரிக்கா அம்மையாரினால் ஆகஸ்ட் 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான வரைபு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சகல கட்சிகளின் மாநாடு (APRC) மற்றும் அண்மையில் அமைக்கப்பட்ட “அரசியலமைப்பு மாற்றத்திற்கான பொது மக்கள் கருத்தறி குழு” ஆகியவற்றில் நான் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக செயற்பட்டதன் விளைவாக முதலமைச்சர் மட்டுமல்ல,அரசியலமைப்பு பேரவையினால் உருவாக்கப்ப ட்டிருக்கும் உபகுழுக்களில் ஒன்றான மத்தி-மாகாணங்களிற்கிடையிலான உறவுகளிற்கான (Centre – Periphery Relations) குழுவிலும் நான் ஓர் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

சி. தவராசா
எதிர்க்கட்சித் தலைவர்
வடக்கு மாகாணசபை

என்று தீரும் அரசியல் கைதிகள் விவகாரம்

தமிழ் அரசியற் கைதிகளின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தங்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். சிறைச்சாலைக் கூரையின் மீதேறிக் கலகம் விளைவித்திருக்கிறார்கள். ஜனாதிபதிக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் அரசியற் தலைமைக்கும் என்று தங்களுடைய நிலைமையைச் சொல்லியும் தமது நியாயங்களைக் குறிப்பிட்டும் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். கைதிகளின் பெற்றொரும் உறவினர்களும் கூட ஜனாதிபதிக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னே கைதிகளைப்பற்றி, அவர்களுடைய விடுதலையைப்பற்றிக் கண்ணீர் மல்க எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்த போதும் கைதிகளின் விடுதலைக்கான சாத்தியங்கள் தென்படவில்லை. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடைப்பிடித்த அதே அணுகுமுறையத்தான் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீட்சியில்லை. எந்த மீட்பருமில்லை என்ற நிலையில்.

அப்படியென்றால் தமிழ் அரசியற் கைதிகளின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?

முதலில் அரசியற் கைதிகள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடும் கைதிகளுக்கும் அரசியற்கைதிகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. அதனால்தான் இவர்கள் அரசியற் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஏனைய கைதிகள் தனிப்பட்ட ரீதியில் அல்லது குழுவாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதற்கான தண்டனை முறையும் விடுதலைக்கான நியாயங்களும் வேறு. அரசியற்கைதிகள் அப்படியல்ல. அவர்கள், ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஒரு செயற்பாட்டமைப்பின் நோக்குநிலையில் செயற்படுவோர். இவர்கள் குற்றச்செயல்களில் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சொல்லப்பட்டாலும் அந்தச் செயல்கள் ஒரு அரசியல் வடிவத்தைக் கொண்டிருப்பவை. ஆகவே, இவர்களுடைய விவகாரத்தை அணுகும்போது அவற்றின் அரசியல் தன்மையையும் அதனோடிணைந்த மக்கள் நலனையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியற் கைதிகள், பெரும்பாலும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது அந்த அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்கள். அல்லது அந்த அமைப்புக்கு உதவியவர்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இதைத் தவிர்த்து, பிற கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் யாரும் இல்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பு போரிலே தோற்கடிக்கப்பட்டு விட்டது. அதனுடைய செயற்பாடுகள் இப்போது இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறுதிப்போரின் பிறகு சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டு, புனர்வாழ்வு நடவடிக்கைக்குள்ளாக்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் விடுலைப்புலிகள் அமைப்புக்கு உதவியவர்கள், அந்த அமைப்பை ஆதரித்தவர்கள் என்றவகையினரும் அடக்கம். சிலர் மீதான வழக்குகள் நிலுவையிலிருப்பதால் அவர்களுடைய விடுதலை தாமதமாகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்றும்படி அனைவருக்கும் ஒரு பொதுமன்னிப்புக்கு நிகரான ஏற்பாட்டில் விடுதலையளிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல, விடுதலையளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கம் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான சிறிய அளவிலான ஏற்பாடுகளிலும் அரசாங்க உதவிகள் செய்யப்படுகின்றன.

அப்படியென்றால், மீதியாக இருப்பவர்களை எதற்காகத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? இதுதான் கைதிகள் கேட்கின்ற கேள்வி. கைதிகள் மட்டுமல்ல, அவர்களுடைய உறவினரும் இந்தக் கைதிகளைக் குறித்துச் சிந்திப்போரும் கேட்கின்ற கேள்வியாகும்.

ஆனால், இதற்குச் சரியான பதிலை யாரும் சொல்லவில்லை. அரசியற்கைதிகள் விவகாரம் என்பது சட்டரீதியான ஒரு பிரச்சினை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்துறையாளருமான ஒருவர் சொன்னார். இது சட்டரீதியான பிரச்சினையாக இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு அரசியற் பிரச்சினையே என்று அவரிடம் சொன்னேன். சிறிது நேர யோசனைக்குப்பிறகு, உண்மைதான். அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அப்படிச் சொன்னவர், அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தை சட்டத்தின் பிடியில் இருந்து மீட்டு, அரசியல் விவகாரமாக்கிக் கையாண்டிருக்க வேணும். அப்படிச் செய்யவில்லை. இது வருத்தமளிக்கும் ஒரு செயல். கூடவே ஏமாற்றத்தையும் தருகின்றது.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பைச சேர்ந்தவர்களை அரசாங்கம் கையாண்ட விதம் வேறானது. அவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கை இதில் முக்கியமானது. இதைப் பெருமையோடு அரசாங்கம் சொல்லியும் வருகிறது. அப்படியானால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரையும் அதற்கு உதவியதாகக் கருதப்படுவோரையும் எதற்காகத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? அவர்களையும் விடுதலைச் செய்து சமூகத்துடன் இணைத்து விடலாமே. அச்சுறுத்தலுக்கான அமைப்பே இல்லை என்றபிறகு அதனுடைய எச்சங்கள் என்று சொல்லப்படுவோரைத் தடுத்து வைத்திருப்பதனால் பயனென்ன?

கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களோடும் குற்றச்செயல்களோடும் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவற்றை விசாரிப்பதற்காகவும் அந்தச் செயல்கள் உண்டாக்கிய சேதங்களின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டும் இவர்கள் தடுக்கப்பட்டு வைத்திருக்கலாம் என்று கூறலாம். அப்படியானால், எதற்காக, யாரால் அவர்கள் அப்படிச் செயற்படுத்தப்பட்டனர்? என்ற கேள்வியை நாம் திருப்பிக் கேட்கமுடியும். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட புலிகளின் முன்ளாள் உறுப்பினர்களில் பலரும் இப்படிச் செயற்பட்டவர்கள்தானே. அப்படியிருந்தும் அவர்களெல்லாம் விடுவிக்கப்பட்டிருக்கின்றனரே. ஒரு வித்தியாசம் உண்டு. என்னவென்றால் அவர்களி்ல பலரும் இறுதிப்போரை அடுத்துச் சரணடைந்தவர்கள். ஆனால், கைதிகளாக இருப்போர் யுத்தம் நடந்தவேளையில் அங்குமிங்குமாகக் கைது செய்யப்பட்டவர்கள்.

தவிர, இவர்கள் புலிகளால் இயக்கப்பட்டவர்கள், புலிகளுடைய செயற்பாடுகளுக்குத் துணையிருந்தவர்கள் என்றால், அந்தப்புலிகள் இல்லாத நிலையில் ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்ளுக்கு வழங்கப்பட்ட நியாயத்தை இவர்களுக்கும் வழங்கி விடுவிக்க வேண்டியதுதானே. இவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்காக இந்த வஞ்சம் தீர்ப்பு?

இந்தக் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதற்குத் தயக்கம் காட்டினால், அதைச் சட்டரீதியாக அணுகுவதற்குப் பொருத்தமான சட்ட அணுகுமுறைகள் இல்லையா? அதைச் செய்யயக்கூடிய வல்லமையுள்ள சட்டத்தரணிகள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா?

அடுத்தது, இந்தக் கைதிகள் அரசியற் கைதிகள். அதுவும் கடந்த காலச் செயற்பாடுகளின் நிமித்தமாகக் கைது செய்யப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட கைதிகள். அந்தக் கடந்த காலத்தின் அமைப்பான விடுதலைப்புலிகள் இன்றில்லை. எனவே அந்த அமைப்புக்குப் பின்னான அரசியலை முன்னிறுத்தி அவர்களுடைய பிரச்சினை அணுகப்பட வேண்டும். ஆகவே இதை அரசியல் ரீதியாக அணுக வேணும். அப்படி அரசியல் ரீதியாக அணுகுவதாக இருந்தால், அதற்கு அரசியற் தரப்புகள் முன்வருவது அவசியம். இதில் தனியே தமிழ் அரசியற்தரப்புகள்தான் முன்வரவேணும், செயற்பட வேணும் என்றில்லை. சகல தரப்பினரும் இந்தக் கைதிகள் விவகாரத்தில் ஈடுபடலாம். ஏனென்றால், இது ஓர் அரசியல் விவகாரம்.

இந்த அரசியல் விவகாரத்தை முன்னெடுப்பதில் தமிழ்த்தரப்பினர் கூடப் பலவீனமாகவே உள்ளனர். இதற்குக்காரணம் இவர்களிடம் உள்ள மாற்றான்தாய் என்ற மனப்பாங்கே. இவர்களுடைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ உள்ளே (சிறையில்) இருந்தால் இந்தத் தலைவர்கள் வெளியே இப்படி இருப்பார்களா?

தவிர, தற்போது அரசியற்கைதிகளாக இருப்போர், பெரும்பாலும் மக்களிடத்திலே பெரிய அளவிற்கு அறியப்படாதவர்கள். குறிப்பாக எந்தக் கட்சியினதும் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ கிடையாது. தமிழ் அரசியற் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கைதுக்கும் சிறைக்கும் செல்லாத வகையிலேயே சாதுரியமாக அரசியலைச் செய்யப்பழகியவர்கள். அதில் சாதனை படைத்திருப்பவர்கள். ஆகவே, அவர்கள் தவறியும் இந்தப் பொறிக்குள் – சிறைக்குள் வீழ்ந்து விடமாட்டார்கள். அவர்களுடைய அரச எதிர்ப்பும் போராட்டங்களும் அதற்கு ஏற்றமாதிரியானவையே. கட்டியிருக்கும் வேட்டியும் போட்டிருக்கும் சட்டையும் கசங்காமல் நடத்தும் போராட்டக்காரர்கள். ஆகவே, சிறைவாழ்வு என்பது சரித்திரத்திலேயே இவர்களுக்குக் கிடையாது. ஆகவே, சிறையிருப்போர் வேறு யாரோதானே. அவர்கள் சிறையிருப்பது, விடுதலை செய்யப்படாதிருப்பது என்பது ஒரு அரசியல் முதலீடும் கூட. சிறையிருப்போரைச் சொல்லியே வாக்குகளைப் பெறுவதற்கும் காலத்தை ஓட்டுவதற்கும் உள்ள வாய்ப்பை எப்படி இவர்களால் இழக்க முடியும்? அது தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை கையால் இழப்பதற்குச் சமமாகுமே.

இப்படித்தான் தமிழ் அரசியற் தலைமைகளும் கட்சிகளும் சிந்திக்கின்றன. ஏதோ சாட்டுக்கு ஒரு அடையாளப்போராட்டத்தை நடத்துவதைப்போலப் படங்காட்டுவதோடு, இந்த விவகாரம் மறக்கடிக்கப்படுகிறது. விடுதலைக்கான சாத்தியங்களை உண்டாக்கும் விதமாக, அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இவர்களில் யாரும் தயாரில்லை. முறையாக உண்ணாவிரதமிருக்கவோ, கைதிகளின் விடுவிப்புக்காக மக்களை அணிதிரட்டி நடக்கவோ, கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், எம்மையும் உள்ளே போடுங்கள் என்றோ இவர்களில் யாரும் துணியவில்லை. அதாவது அந்தளவுக்கு இந்த விசயத்தை இவர்கள் சீரியஸாக எடுக்கவும் இல்லை. அதற்காக றிஸ்க் எடுக்கவும் இல்லை.

இவ்வளவுக்கும் தென்னிலங்கையில் சிங்களத்தரப்பில் ஆட்சி மாற்றத்துக்கும் அதிகார மாற்றத்துக்குமாக பலர் றிஸ்க் எடுத்திருக்கிறார்கள். சரத் பொன்சேகா இதற்கு நல்லதொரு உதாரணம். இதைப்போலப் பலர் உள்ளனர்.

தமிழ் அரசியற் போராட்டமே சிறை வாழ்விலும் சிறைச்சாலைப் படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் காணாமற்போதல்களிலும் உயிரை ஈயும் தியாகங்களிலும் உடல் உறுப்புகளை இழப்பதிலும்தான் செழித்தது. உச்சமான அர்ப்பணிப்புகளைச் செய்த பாரம்பரியத்தைக் கொண்டது. ஒரு அரசியல் போராட்டம் என்பது இப்படியெல்லாம் நடக்கத்தான் வேண்டுமா என்று கேட்கலாம். இதெல்லாம் கட்டாயமென்றில்லைத்தான். ஆனால், தமிழ் அரசியற் போராட்டத்தின் உணர்ச்சிகர விசயங்களைத் தங்களுடைய அரசியலுக்குப் பயன்படுத்துவோர், நிச்சயமாகத் தாங்களும் றிஸ்க்கெடுக்க முன்வர வேண்டும்.

உண்மையில் இன்று அரசியற் கைதிகள் விடுதலை பெறாமல் இருப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, “நாங்கள் இன்னும் புலிகள் விசயத்தில் கவனமாக – இறுக்கமாகவே இருக்கிறோம்“ என்று சிங்கள மக்களுக்குக் காண்பிக்க அரசாங்கம் விரும்புகிறது. “தமிழ் அரசியற்கைதிகளை விடுவிக்காத அரசாங்கத்தை நாம் நம்ப முடியாது. ஆகவே இன ஒடுக்குமுறை இன்னும் நீடிக்கிறது என்பதற்கான சான்றுகளில் இது ஒன்று என்பது நிரூபணம். எனவே, நாம் தொடர்ந்தும் போராடியே தீர வேண்டும்“ என்று கூறுவதற்கு தமிழ் அரசியலுக்கு வசதியாக உள்ளது. இப்படி இரண்டு தரப்பின் நலனுக்காகவும் அரசியற் கைதிகள் சிலுவை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

மெய்யாகவே அரசியற் கைதிகளின் விடுதலைக்காகப் போராடுவதாக இந்தத் தலைவர்கள் போராடியிருந்தால், இவர்களில் சிலராவது இன்று கைதிகளாக இருந்திருப்பர். அப்படி நிகழாத வரையில் இவர்களுடைய போராட்டம் என்பது, வெறும் புலுடாவே. அதாவது, அரசாங்கத்துக்கு இவர்களைக் குறித்து சிறிய அச்சமும் கிடையாது. மட்டுமல்ல, இவர்கள் மெய்யாகப் போராடப்போவதில்லை என்றும் அரசுக்குத் தெரியும்.

அதையும் கடந்து, அபுர்வமாக இவர்கள் கைதிகளானால் இவர்களை மீட்பதற்காக சிலவேளை மெய்யான போராட்டங்கள் நிகழக்கூடும். ஆனால், இவர்களில் சிலர் கைதானால், அப்படியே அவர்களைச் சிறையில் விட்டுவிடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. அந்தளவுக்கு உள்குத்துகள் தமிழ்க்கட்சிகளுக்குள்ளே உண்டென்பதையும் நாம் அறிவோம்.

அரசியற் கைதிகளின் விடுதலை எப்போது என்பது விடை தெரியாத ஒரு கேள்வியே...

-கருணாகரன்-

நன்றி- தேனீ

09 August 2016

தேசிய தொழிலாளர்களுடன் கைகோர்த்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மட்டுமே மலையக அரசியல்வாதிகள்,; தொழிற்சங்கவாதிகள் பேசி வருகின்றனரே தவிர மலையக மக்களின் ஏனைய இன்னோரன்ன பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன என்று ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி சகல துறைகளிலும் தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது. ஊலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உன்னதமான போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டள்ளார்கள். நாளுக்குநாள் தொழிலாளர்கள் மீதான சுமைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பாக யாரும் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்றார் சந்திரசேகரன். 

இலங்கையைப் பொறுத்தளவில் விசேடமாக நாம் மலையகத் தொழிலாளர்களை குறிப்பிட வேண்டும். இவர்களுக்கு அநீதி அதிகரித்து காணப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இவர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை மட்டுமே முதன்மைப்படுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளான வீடு, காணி, மக்களின் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், சுகாதாரம் என ஏனைய பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. எனினும் இதனையும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்றார்கள் இன்று நல்லாட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என பலரும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்கள். இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்து விட்ட நிலையில் தொழிலாளர்களை கைவிட்டள்ளார்கள். 

தேசிய ரீதியில் தொழிலாளர்கள் இருந்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையக அரசியல்வாதிகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பிரிந்து வைத்திருப்பதால் பாதக விளைவுகளே ஏற்படுகின்றன. பாழாய் போன தொழிற்சங்கங்களையும் மலையக அரசியல்வாதிகளையும் மலையகத் தொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் அப்பால் வர்க்க ரீதியாக நாம் பார்க்கின்றபோது தொழிலாளர் சக்தி என்ற ஒன்று இருக்கிறது. மலையக தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்று சேர்கின்றபோது தொழிலார் சக்தி பலமடைகின்றது. காத்திரமான வெற்றிகளை பெறக்கூடிய வாய்பர்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

தோட்ட மக்களுக்கு இப்போது சமூக ரீதியான பிரச்சினை ஒன்றும் உள்ளது மலையக பெருந்தோட்டங்களில் வாழ்வதா இல்லையா என்ற சிந்தனையுடன் இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் கைகோர்த்து போராட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் தோல்வி கண்டிருக்கின்றன. எனவே தொழிலாளர்கள் தேசிய போராட்டத்தினை முன்னெடுப்பதே சிறந்ததாகும். 

68 வருட காலமாக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறியுள்ளனர். எனவே பொதுவாக நாட்டு மக்களுக்கு புதிய பாதை என்ற ஒன்று தேவைப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் மகிமையை தோட்டத் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மழுங்கடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் இருந்து தொழிலா ளர்கள் மீண்டெழுதல் வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கின்றது என்றார்.

மனசாட்சியின் கைதி - முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம்

இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாக கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சுட்டு கொல்வது போன்ற சிறப்பு அதிகாரங்களை இந்த சட்டம் படைவீரர்களுக்கு வழங்குவதற்கு எதிராக அவருடைய இந்த போராட்டம் நடைபெற்றது.
மணிப்பூர், இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
ஒரு தசாப்த காலமாக ஷர்மிளாவுக்கு மூக்கில் பொருத்தப்பட்ட ஒரு குழாய் வழியாக கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
16 ஆண்டுகளுக்கு முன்னதாக மணிப்பூரில் 10 பொது மக்கள் இந்தியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஷர்மிளா இந்த உண்ணாவிரத்தை தொடங்கினார்.

இந்த 16 ஆண்டுகளில் பெரும்பாலும் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கழித்துள்ளார். அங்கு மருந்தும், நீராகார உணவுகளும் அவருக்கு கட்டாயமாக செலுத்தப்பட்டு வந்தது.
தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷர்மிளாவை விடுதலை செய்தது.
ஆனால், அவருடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மணிப்பூர் உயர்நீதிமன்றம் சென்று தன்னுடைய போராட்டத்தை அவர் உறுதிசெய்து வந்திருக்கிறார்.
அவருடைய இந்த போராட்டம் உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அம்னெஸ்டி சர்வதேச சபை அவரை மனசாட்சியின் கைதி என்று வர்ணித்துள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை இந்த செயற்பாட்டாளர் ஈர்த்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களின் ஆதரவையும் ஷர்மிளா பெற்றிருக்கிறார்.
இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட 10 பொதுமக்களின் நினைவாக, சம்பவம் நடந்த இடத்தில் நினைவகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இரண்டரை மில்லியன் (25 லட்சம்) மக்கள்தொகை கொண்ட மணிப்பூரில், கிளர்ச்சி குழுக்களை எதிர்த்து போராட பெரியதொரு படைப்பிரிவும், துணை ராணுவப் படையும், மாநில போலிஸ் பிரிவும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- பி.பி.சி